கோயம்புத்தூர்: கோடை வெயிலின் தாக்கத்தால் பல்வேறு வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் நிகழ்வு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோவையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வருகிறது. தற்போது, பொள்ளாச்சி அடுத்த ஆனைக்கட்டி மற்றும் தடாகம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவை வனத்துறையினர் மாங்கரை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மாங்கரை ஓடைப் பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்துள்ளது.