மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கிஷோர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜன.29ஆம் தேதி கடும் வயிற்று வலி காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் கிஷோர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (பிப்.5) சிறுவனின் தந்தை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தந்தை, "மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார். இதனால் எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வந்துள்ளது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையை மூட வேண்டும் என்பதே எனது நடவடிக்கை. தனியார் மருத்துவமனையில் சரிவர உபகரணங்கள் எதும் இல்லை. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.