தேனி: அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்யும் மகனை உறங்கிக்கொண்டிருந்த போது தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழன். இவருக்கு 30 வயதில் ரிவன் ராஜ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
ரிவன் ராஜ் சிங்கராஜபுரத்தில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். ரிவன் ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரிவன் ராஜ் மது குடித்துவிட்டும் போதையில் தனது பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தவிர, வீட்டில் இருந்த ஒரு பசு மாட்டையும் விற்று ரிவன் ராஜ் செலவழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த ரிவன் ராஜ் மீண்டும் தனது தந்தை தமிழனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் இரவு வீட்டுத் திண்ணையில் ரிவன் ராஜ் படுத்திருந்தார். அடிக்கடி போதையில் தகராறு ஈடுபட்டு வரும் ரிவன் ராஜை கொலை செய்ய முடிவு செய்த தந்தை தமிழன் அரிவாளை எடுத்து படுத்திருந்த ரிவன் ராஜை சரமாரியாக வெட்டினார்.
இதையும் படிங்க:அண்ணா பல்கலை சம்பவம்; 'பாதிக்கப்பட்ட மாணவி அப்படி சொல்லவே இல்லை'.. காவல்துறை அதிரடி அறிவிப்பு..!
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரிவன் ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரிவன்ராஜ் உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ரிவன் ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தமிழனை கைது செய்தனர். மகனை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சிங்கராஜபுரம் கிராம மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.