புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே சொத்து கேட்டு தகராறு செய்த மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த விவகாரத்தில், தந்தை உள்ளிட்ட 2 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை வாடிக்காடு பகுதியைச் சோ்ந்தவர் செல்வராஜ் (56). இவர் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இன்பரசன் (24), இயலரசன் (20) என இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், இவரது மூத்த மகன் இன்பரசன், இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரிலிந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து, சொத்தில் தனக்கான பங்கைக் கேட்டு தந்தை செல்வராஜிடம் அடிக்கடி மதுபோதையில் அவர் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது நண்பர் உலகநாதன் (65) வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், தந்தை செல்வராஜை தேடி இன்பரசன் அங்கு வந்துள்ளார். மீண்டும் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதையும் படிங்க:மனைவிக்கு பங்கு கொடுக்காத மாமியாரை கொன்ற மருமகன்.. தேனி நீதிமன்றம் விதித்த தண்டனை என்ன?
அங்கு இருவரும் வாக்குவாதம் செய்த நிலையில், இருவருக்கும் உண்டான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை செல்வராஜ் மற்றும் அவரது நண்பர் உலகநாதன் இருவரும் சேர்ந்து இன்பரசனை சுத்தியலால் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த இன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலீசார், உயிரிழந்த இன்பரசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், சொத்து பிரச்னை தொடர்பாக தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக செல்வராஜ் கூறியதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்னை தொடர்பாக அடிக்கடி தந்தையிடம் சண்டையிட்ட மகனை தந்தையே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்