சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் குடியுரிமை சோதனைகாக நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை தற்போது வரை உள்ளது.
பொதுவாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவில் மற்றும் அதிகாலை நேரங்களில் ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்வதாலும், ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு ஒரே நேரத்தில் வந்து சேர்வதாலும், இதுபோன்று குடியுரிமை கவுன்டர்களில் சோதனைகாக நீண்ட வரிசையில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
புதிய திட்டம் அறிமுகம்:இந்த குடியுரிமைச் சோதனை பிரிவானது இந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை சோதனைக்காக விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக, மத்திய உள்துறை அமைச்சகம் 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் டிரஸ்டட் டிராவலர் ப்ரோக்ராம்' (Fast Track Immigration – Trusted Travelers Programme) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பயன் பெறுபவர்கள் யார்?இந்த புதிய திட்டத்தில் இந்திய பயணிகள் மற்றும் பூர்வீக இந்தியர்களாக இருந்து தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மட்டுமே பலன் பெற முடியும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்திற்கு முன்னதாகவே அதற்காக தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கட்டண விவரம்:மேலும் கட்டணமாக பெரியவர்கள் ரூ. 2,000, குழந்தைகள் ரூ. 1,000 மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 US டாலர்கள் பதிவின்போது செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் செலுத்த வேண்டியது இல்லை. ஒருமுறை செலுத்தினால் அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதி வரை இக்கட்டணம் செல்லுபடி ஆகும்.
இதையும் படிங்க: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள்!
நேரத்தை மிச்சப்படும் நவீன முறை:இந்த திட்டமானது FTI-TTP, https://ftittp.mha.gov.in என்ற இணையதளம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேவையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம் ஆன்லைன் பதிவை முடிக்க வேண்டும். பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் தரவு (கைவிரல் ரேகை பதிவு, முக அடையாளம்) வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (FRRO) அல்லது விமான நிலையத்துக்குள் செல்லும்போது சேகரிக்கப்படும்.
குடியுரிமை சோதனைக்காக திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்கள் (ETV Bharat Tamil Nadu) பதிவுசெய்யப்பட்ட பயணிகள், விமான நிறுவனம் வழங்கிய போர்டிங் பாஸை இ-கேட்டில் ஸ்கேன் செய்து, அதைத் தொடர்ந்து தங்கள் பாஸ்போர்ட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டும். வருகை மற்றும் புறப்பாடு இடங்களில் பயணிகளின் பயோமெட்ரிக் தரவு சரிபார்க்கப்படும். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், இ-கேட் தானாகவே திறக்கும். இதுவே குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும். உடனடியாக அவர்களுடைய பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டு பயணிகள் வேகமாக தங்கள் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு அடுத்த கட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்று விடலாம்.
திட்டத்தை தொடக்கி வைத்த மத்திய அமைச்சர்:இந்தத் திட்டம் ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு முதல் டெல்லி விமான நிலையத்தில் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களுக்கு 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் சிஸ்டம்’ என்ற புதிய முறையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு (ஜன.16) அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு 8.30 மணியில் இருந்து ’பாஸ்ட் ட்ராக் இம்மிகிரேஷன் சிஸ்டம்’ முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் புறப்பாடு பகுதியில் 4 சிறப்பு கவுன்டர்களும், வருகை பகுதியில் 4 சிறப்பு கவுன்டர்களும் என மொத்தம் 8 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக கவுன்டர்கள் அமைக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.