தேனி:தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்ந்து வருகிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை கடந்த 128 ஆண்டுகள் பழமையானது. இது பலவீனமாக உள்ளது; எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வந்தது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, அணையிலிருந்து வள்ளக்கடவு செல்லும் பாதையில் 366 மீட்டரில் புதிய அணைக்கான இடம் தேர்வு செய்தது மட்டுமல்லாமல் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
புதிய அணை கட்டுவதற்கான, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு அளித்த விண்ணப்பம் நாளை (மே.28) நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசு கட்டும் புதிய அணையின் திட்ட அறிக்கையை நிராகரிக்கக் கோரியும் விவசாய சங்கத்தினர், தமிழக - கேரள எல்லையான குமுளியில் முற்றுகையிடுவதற்காக லோயர்கேம்ப் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர்.