தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் உத்தரவிட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை? - 15 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்! - விவசாயிகள் கோரிக்கை

Govt DPC Issue: நெல் அறுவடை தொடங்கி 15 நாட்களாகியும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

govt direct paddy procurement stations opening issue
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 8:06 PM IST

ஆட்சியர் உத்தரவிட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை என புகார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் நிகழாண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா, தாளடி, நெல் போன்ற சாகுபடியை செய்திருந்தனர். மேலும் மேட்டூர் பாசன தண்ணீர் கடைமடைக்கு திறந்துவிடாததால், பம்புசெட் தண்ணீர் மற்றும் மழைநீரை மட்டுமே நம்பி விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் அறுவடையை தொடங்கினர். ஆனால் தொடங்கிய நாளன்றே மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில்) தொடர் மழை பெய்தது. இதனால் மழைக்குப் பின்னர் அனைத்து பகுதிகளிலும் (ஜனவரி 9) மீண்டும் அறுவடை பணிகள் தொடங்கின. மேலும் சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து கிடக்கின்றன.

தற்போது 15 நாட்களாக அறுவடை தொடங்கிய நிலையில், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் ஒரு சில விவசாயிகள் தனியாரிடம் விற்பனை செய்ய தொடங்கினர். அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று, அடுக்கி வைத்து விவசாயிகள் இரவு, பகலாக காத்திருந்து பாதுகாத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், நெல் மூட்டைகள் பனி, வெயில் ஆகியவற்றால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் சுமார் 60 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தரங்கம்பாடி தாலுக்கா காளகஸ்தினாதபுரம் பகுதியில் முதல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள 59 கொள்முதல் நிலையங்களும் மறுநாளே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், ஒரு வார காலம் ஆகியும் எந்த கொள்முதல் நிலையமும் திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களின் முன்பும், கொட்டி வைத்து 15 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். சில விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய், சாக்குபைகள், படுதா இல்லாததால் அறுவடை செய்யும் பணியை தள்ளி வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு சம்பா தாளடி பருவத்தில் 116 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் அனைத்து கொள்முதல் நிலையங்களையும் திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு - 5 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்திய வடிவில் நின்று சாதனை!

ABOUT THE AUTHOR

...view details