கருகிய நெல் பயிருடன் இழப்பீடு கேட்டுவிவசாயிகள் போராட்டம் புதுக்கோட்டை: காலாவதியான மருந்தை பயன்படுத்தி 8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியதால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் நெற்பயிர்களை கொட்டியும், செல்போன் டவரில் ஏறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, மணப்பாறை வட்டத்திலுள்ள மறவனூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் என்ற விவசாயி. இவர் தனது 10 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். நெற்பயிர்களில் பூச்சி விழுந்ததால், புதுக்கோட்டை, விராலிமலையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில், ரூ.5 ஆயிரத்து 500க்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி 8 ஏக்கர் நெற்பயிருக்கு அடித்துள்ளார்.
ஓரிரு நாட்களில், மருந்து அடிக்கப்பட்ட எட்டு ஏக்கர் நெற்பயிர்கள் மட்டும் கருகி பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு ஏக்கர் நெற்பயிர் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை ஆய்வு செய்த நிலையில்,அவை காலாவதியான மருந்து என்பது தெரியவந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி செந்தில், மணப்பாறை வேளாண்மை அதிகாரி மற்றும் விராலிமலை வேளாண்மை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அனால், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வைத்துக் கொண்டும், சேதமடைந்த நெற்பயிர்களை தரையில் கொட்டியும் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மருந்து கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒப்பாரி வைத்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகவி, வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்தனர்.
இதற்கிடையில், பிச்சத்தான்பட்டியில் உள்ள செல்போன் டவரில் இரண்டு விவசாயிகள் ஏரி விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் கீழே இறங்க மாட்டோம் என விவசாயிகள் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், விவசாயிகள் சமாதானத்திற்கு உடன்படவில்லை. அதனைத்தொடர்ந்து, மாநில தலைவர் அய்யாக்கண்ணு மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததின் பேரில் அய்யாகண்ணு, செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அவரின் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் கிழே இறங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருந்து கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:பண்ணாரியம்மன் கோயிலில் பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை - Flying Squad Seized Money