திருச்சி:கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்திட வேண்டும். சம்பா சாகுபடிக்கு உதவும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்கக் கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 7500 இழப்பீடு வழங்க வேண்டும்.
நீர் நிலைகளை நிறுவனங்கள் அபகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது "டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி நடைபெற்றது. இதில் 5 லட்சம் ஏக்கர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.
இதனையடுத்து 10 லட்சம் ஏக்கருக்குத் தேவையான தண்ணீரை வழங்குமாறு தமிழக அரசிடம் முறையிட்டோம். ஆனால் குடிநீர் என்ற போர்வையில் தனியார் ஆலைகளுக்கு தண்ணீரைத் தேக்கி வைத்துள்ளது தமிழக அரசு. மேட்டூர் அணையைத் திறக்க மறுக்கிறது, இதன் காரணமாக அணையை திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் ஒன்றிணைந்து மேட்டூர் அனைக்கு சென்று போராடவுள்ளோம்.