தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அமைப்புகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்! - MULLAPERIYAR DAM ISSUE

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக போராடும் கேரளா அமைப்புகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் (ETV Bharat Tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2025, 4:41 PM IST

தேனி: முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக போராடும் கேரளா அமைப்புகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கேரளா அரசையும் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் மாநில எல்லையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா அரசும், கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து, அவதூறுகளை பரப்பி வருகின்றன. இந்த நிலையில், இதனை கண்டிக்கும் விதமாகவும், உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த வேண்டும் எனவும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க கோரிக்கை விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்காக, பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில், விவசாய சங்கத்தினர் தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்பில் தமிழக-கேரளா எல்லையை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று (பிப்ரவரி 08) ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணை வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

இந்தப் போராட்டத்தில் தேனி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், லோயர் கேம்ப் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக தமிழக கேரளா எல்லையான குமுளி நோக்கி சென்ற விவசாயிகள் சங்கத்தினரை, கர்னல் ஜான் பென்னிகுயிக் மணி மண்டபம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையில், காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையில் உடன்பட்ட முல்லைப் பெரியாறு வைகை பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தமிழக - கேரள எல்லைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details