மதுரை: மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற இட்லி கார்த்திக். இவர் வழிப்பறி வழக்கில் கடந்த 2ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த ஐந்தாம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவலர்கள் விசாரணையின்போது கார்த்திக்கைக் கண்மூடித்தனமாகக் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக, அவரது தந்தை கணேசன் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து மதுரை ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் கல்யாண் மாரிமுத்து விசாரணை நடத்தினார்.
இதனை அடுத்து, கார்த்திக் உடல், நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் எக்ஸ்ரே செய்யப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், விசாரணை கைதி கார்த்திக்கின் உடற்கூறு ஆய்வின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
இந்த உடற்கூறு ஆய்வின் அறிக்கையில், கார்த்திக்கின் உடல் முழுவதும் கடும் காயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மார்பக பகுதியில் அடர்ந்த ரத்தக்கட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.