சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் அவ்வப்போது சாதிய மோதல்களால் தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பள்ளியில், ஒரு மாணவரை சக பள்ளி மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
தடுக்கச் சென்ற மாணவரின் தங்கையையும் மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசின் நேரடி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் நடைபெறக்கூடிய சாதிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உரியப் பரிந்துரை அறிக்கையைப் பெறுவதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து இது தொடர்பாகக் கருத்துக்களைப் பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குழுவின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் இறுதியுடன் முடிவடைந்ததை அடுத்து குழுவின் பதவிக் காலத்தை மே இறுதிவரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மே மாதத்திற்கு உள்ளாகத் தனது ஆய்வை முடித்து தமிழக அரசுக்குப் பரிந்துரை அறிக்கையை நீதிபதி சந்துரு அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே குழுவை நியமித்தும், அதன் பணிகள் குறித்தும் அரசாணை வெளியிட்டது.
அதில், "முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகளை வகுப்பதற்குச் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது.