சென்னை:அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்தின் சார்பில், திருவிக நகரில் அதிமுகவில் இணைந்தவர்களுக்கான புதிய உறுப்பினர் சீட்டுகளை சென்னை பெரம்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "விமானப் படை சாகசம் சென்னையில் நடந்தது ஒரு வரப்பிரசாத நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சிக்கு 15 லட்சம் மக்கள் வருவார்கள் என விமானப் படையிலிருந்து தகவல் தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு தேவையான போதுமான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வசதிகள் செய்யப்பட்டு, மக்களுக்கு எந்த வசதியையும் தமிழக அரசு செய்யவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) சாலைகளில் நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலையே மக்களுக்கு ஏற்பட்டது. கையில் குழந்தைகளுடன் 5 முதல் 7 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் நடந்து சென்றும் நிகழ்ச்சியைக் காணமுடியவில்லை. வெறும் 10 ஆயிரம் பேர் பார்க்கும் கார் பந்தயத்திற்கு 15 துறையினர் வேலை பார்த்த நிலையில், 15 லட்சம் மக்கள் வருவார்கள் என தகவல் இருந்தும் அதற்கான ஆய்வினையோ, பொதுமக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையோ செய்தார்களா?
இதையும் படிங்க: சென்னை விமான சாகசம்: "நெரிசலில் 5 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் வேதனையளிக்கிறது" - இபிஎஸ் கண்டனம்!
பேனா சிலைக்கும், கலைஞரின் மணிமண்டபத்திற்கும் கோடி கோடியாக பணம் செலவழிக்கும் இந்த அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு மக்கள் நிம்மதியாக அமர்ந்து பார்க்கும் வகையில் ஷாமியானா பந்தல் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த நிகழ்வு திமுக அரசின் நிர்வாக தோல்வியையே காட்டியுள்ளது. விமானப் படையிலிருந்து 10 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்தும், முறையான ஏற்பாடு இல்லாததால் இன்று 3 பேர் உயிரிழந்ததற்கான முழு பொறுப்பையும் திமுக அரசு தான் ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வசூல் ரூ.30 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மதுக்களைத் தேடி தேடி விற்பதையே முழு மூச்சாகவும், முழு வீச்சாகவும் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக்கை மூடவும், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தவும் தமிழக அரசு தீர்மானம் இயக்கினாலே அனைத்தும் மூடப்படும். மேலும் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சிக் கொடியை தலை முதல் கால் வரை, இடது முதல் வலது வரை என எப்படி வேணாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு அரசு நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் சென்றது ஏற்புடையதல்ல.
உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் கூட நாங்கள் வாங்கித் தருகிறோம். அரசுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சட்டை, பேண்ட் மற்றும் வேஷ்டி தான் அணிய வேண்டும் என்பது மரபு. இனி வரும் அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி உடை விஷயத்தில் இதையே தொடர்ந்தால் அவருக்கு எதிராக அதிமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்" என எச்சரித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்