சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உள்ளாரம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் என்பது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி செய்யப் போவது அதிமுக தான். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மாறிமாறி வருவது வழக்கம்.
அண்ணாமலை ஒரு 'புள்ளி ராஜா': அண்ணாமலையைப் பொறுத்தவரை அவர் ஒரு 'புள்ளி ராஜா' ஆகிவிட்டார். எதற்கெடுத்தாலும் புள்ளி விவரத்தோடு பேசுவார். புள்ளி விவரங்களை திரட்டும் அதிகாரியாக இருந்தாரே தவிர, ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கவில்லை. 2014 தேர்தலில் இதே கூட்டணி தான் இருந்தது.
அந்த நேரத்தில் பாஜக தமிழகத்தில் வாங்கிய ஓட்டை விட, தற்போது குறைவான ஓட்டு வாங்கியுள்ளது. இதைப் பற்றி அண்ணாமலை ஏன் பேசவில்லை? இது என்ன அவர் சொல்ல மறந்த கதையா? பாஜக 10 ஆண்டுகளில் என்ன வளர்ச்சியைக் கண்டுள்ளது? தருமபுரி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
பாஜக ஆர்சிபி, அதிமுக சிஎஸ்கே: இவர்களை சுருக்கமாகச் சொல்வதென்றால், ஐபிஎல் போட்டியில் வரும் ஆர்சிபி (RCB) அணியைப் போன்றவர்கள். தமிழகத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிமுக சிஎஸ்கே (CSK) அணியைப் போன்றது. பல வெற்றிகளை குவித்துள்ளோம், இன்னும் வெற்றிகளை குவிக்க உள்ளோம்" என கிண்டலாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சுகாதார பிரச்னை, நதிநீர் பிரச்னை போன்றவற்றை பேசாமல், மத இனவாதத்தை மட்டுமே பேசுகிறது பாஜக. தற்போதைய ஆட்சியைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவர் மட்டும் தான் கிங் மேக்கர். புள்ளி விவரங்களைக் கொண்டு படம் காட்டும் வேலை எல்லாம் இங்கு வேண்டாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் திராவிட இயக்கங்கள் தான், பாஜகவிற்கு இடமில்லை" எனக் கூறினார்.