புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 38 ஆயிரத்து 500 கோயில்களைக் கையில் வைத்துக்கொண்டு, நான் கோயிலுக்குள் நுழைய மாட்டேன் எனக் கூறி முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார். அதற்கு என ஒரு அமைச்சரை மட்டும் நியமித்து உள்ளது சரியானது அல்ல. தற்போது திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலுமே இந்து கோயில்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், "கோயில்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் 400 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க வேண்டும். கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளது. அதற்கு காரணமான ஆளும் கட்சியினர் வெட்கி, தலைகுனிய வேண்டும். மேலும், தென்காசி கோயிலில் தீ வைத்த சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை நீங்களும் போராட வேண்டும். இந்து அமைப்புகளும் போராட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன்.
பெரும்பாலான கோயில்களில் விளக்குகள் கூட எரிவதில்லை. இறை நம்பிக்கை இல்லாத கோயிலுக்குள் நுழைய விரும்பாத ஸ்டாலின், 38 ஆயிரத்து 500 கோயில்களை மட்டும் ஒரு அமைச்சரின் கீழ் நிர்வாகத்தில் வைத்துள்ளார். அதற்கு குடமுழுக்கு விழாவை மட்டும் தான் அரசாங்கம் நடத்துகிறது.
புனரமைப்பு வேலைகளை தொல்லியல் அறிஞர்கள் ஒத்துழைப்புடன் நடத்த வேண்டும். கோயில்கள் மூலம் ரூபாய் 650 கோடி வரியினை தமிழக அரசு வசூலிக்கிறது. தமிழக அரசுக்கு கோயிலிலிருந்து வரி மட்டும் வேண்டும். ஆனால், கோயில்களை பராமரிப்பு செய்வது புறக்கணிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏழு கோயில்கள் பராமரிப்பின்றி உள்ளது வேதனைக்குரியதாக இருக்கிறது.
இதையும் படிங்க:எல்லை விரிவாக்கம்: 'விருப்பம் இல்லை என்றால் தெரிவிக்கலாம்' - பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு!