சென்னை:நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஶ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் பாஜகவின் நன்மைக்காக சிறப்பு பூஜையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை முதலமைச்சரிடம் எதிர்பார்த்தோம். முருகன் மாநாட்டை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நேரில் போகவில்லை. முருகன் என்றால் நேரில் சொல்ல மாட்டார் போல. சாதி, மத, இன வேற்றுமை பார்ப்பதில்லை என்கின்றனர். அதேபோல இந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால், கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும்.
அவரது நம்பிக்கையை தவிர்த்து மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் பொறுப்பாக இருக்க வேண்டும். முதலமைச்சரிடம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பெண்களுக்கு அங்கீகாரம் : சகோதரி விஜயதரணி ஒரு கட்சியில் இருந்து விலகி வேரு கட்சியில் இணைந்தவுடன் பதவி கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது இயல்புதான். பாஜகவில் இணைந்த அனைவருக்கும் பதவி கிடைக்கும். சிறிது காலம் ஆகலாமே தவிர காலம் கடக்காது. விஜயதாரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். அதிலும் பெண்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.
முருகன் மாநாடு : பழனியில் நடந்த முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள பள்ளிகளில் கந்த சஷ்டி கவசம் போதிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்த கேள்விக்கு, கந்த சஷ்டி கவசத்தில் உள்ள பொது கருத்துக்கள் பள்ளி மாணவர்களுக்கு போய் சேர வேண்டும். இந்து அறநிலைத்துறை ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிகளில்தான் கந்த சஷ்டி கவசம் போதிக்கப்பட வேண்டும் என தீர்மானத்தில் இருக்கிறது. எக்கச்சக்கமான கிறிஸ்தவப் பள்ளிகளில் கிறிஸ்தவ பாடல்கள் போதிக்கப்படுகிறது. இதனை எதிர்க்காமல் ரவிக்குமார், இந்து நம்பிக்கை வேண்டாம் என்பதனை ஒத்துக்கொள்ள முடியாது.
இந்து கோயிலின் வருமானம் தேவை. ஆனால் இந்து கோயில்களின் நம்பிக்கை இவர்களுக்கு தேவைப் படுவதில்லை. முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காவி மயமாக்கப்படுவதாக ஒத்துக்கொள்ள முடியாது. பண்பாட்டு ரீதியாக இது சரிதான். பண்பாடு என்பது வாழ்வியலோடு ஒற்றுப் போவது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் தான் இது நிறைவேற்றப்படும் எனக் கூறியிருக்கிறார்கள்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளின் வருமானத்தை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என யாரும் சொல்வதில்லை. இந்து மத கோயில்களில் இருந்து வரும் வருமானம், மதம் சார்ந்த வருமானம், காவி வருமானம் என சொல்லி இந்த வருமானம் தேவையில்லை என அவர் சொன்னால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.