ஈரோடு:தனியார் தினசரி நாளிதழ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள "என்றும் தமிழர் தலைவர்" என்னும் நூலின் அறிமுக விழா, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் எம்பி கணேசமூர்த்தி பேசுகையில், “தேவையான நேரத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் கூட சமஸ்கிருத வழிபாட்டு முறை உள்ளது. இதனை மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சனாதனம் வேறு, இந்து மதம் வேறு என்ற புரிதலை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு பெரியார் தொடர்பான புத்தகங்கள் தேவையாக உள்ளன" என்றார்.
இதனைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், “பெரியாரைக் குறித்து என்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் நான் அவ்வளவாக படிக்கவில்லை, இப்படி கூறுவதற்கு நான் வெட்கப்படுகிறோன். ஆனால், கடந்த 4 வருடங்களில் பெரியாரைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் என் மனம் கவர்ந்த நூலாக ‘என்றும் தமிழர் தலைவர்’ புத்தகம் அமைந்துள்ளது" என்றார்.
அதனைத் தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசும்போது, "எதிர்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் வகையில் ‘என்றும் தமிழர் தலைவர்’ என இந்த நூலுக்கு பெயர் வைத்துள்ளனர். பெரியார் குறித்து என் போன்றோர் தொகுத்து இருந்தால் கூட, இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது.
அந்த அளவுக்கு அனுபவத்துடன் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இந்த நூலை வாங்குவதும், படிப்பதும்தான் பெரியாருக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ்குமார், ரவி உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.