சென்னை:காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு (வயது 76) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ( டிச.14) காலை 10:12 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் (Credits - ETV Bharat Tamilnadu) இறுதி ஊர்வலம்:இதனையடுத்து சென்னையில் இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, வசந்தகுமார் உள்ளிட்ட பலரும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோவில்பட்டி சிறுவன் மரண வழக்கு; ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை!
பின்னர் மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முகலிவாக்கம் மின் மயானத்தில் வைக்கப்பட்டு, போலீசார் மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தப்பட்ட பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.