சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் அமர்வு, இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசித்தார். பின்னர், உயிரிழந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கேள்வி நேரத்தில், "முதலமைச்சர் வெளிநாடு சென்று வரலாறு காணாத அளவிற்கு நிதிகளைப் பெற்று வந்துள்ளார். அந்த முதலீடுகள் எல்லாம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை நோக்கி வருகின்றது. தமிழ்நாட்டில் 36 சதவீதத்திற்கு அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்ற பகுதி, ஸ்ரீபெரும்புதூர். ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த பிரச்னையை போக்குவதற்கும், நிவாரணம் செய்து தருவதற்கும் அரசிடம் ஏதாவது புதிய திட்டம் இருக்கின்றதா? அதே போல் ஸ்ரீபெரும்புதூர் பாலம் கட்டுமானப் பணிகள் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருக்கின்றது. அதனை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?" என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "ஸ்ரீபெரும்புதூரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் ஐந்து கட்டமாகப் பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு, புறவழிச்சாலை அமைத்துள்ளோம். திருவள்ளூரில் ஆரம்பித்து, ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில், அங்கிருந்து மகாபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமம் வரை இணைக்கும் திட்டமாகும்.