ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த மானாவாரி நிலங்களில் ராகி, சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பழங்குடியின மக்கள் ராகி, திணை பயிர்களை உணவாக எடுத்துக் கொள்வதால் ஆண்டு முழுவதும் உணவுக்கு ராகி பயிரை நம்பியுள்ளனர்.
இந்நிலையில், மானாவாரி விவசாயத்தை நம்பி வாழும் பழங்குயிடின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் அபாயம் இந்த பகுதியில் தொடர்கதையாக உள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், மாட்டுப்பொங்கலைத் தொடர்ந்தும் மாடுகளைக் குளிப்பாட்டி, கால்நடைகளுக்குச் சிறப்புப் பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
இவ்வாறு, ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகிப் பயிர்களைத் துவம்சம் செய்வதால் பழங்குடியினர் உணவு தேவையில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் மானாவாரி விவசாயத்தை யானைகள் தொல்லை செய்யக் கூடாது என்பதற்காகக் கிராம மக்கள் நேர்த்திக்கடனாக யானைகளுக்குச் சிறப்புப் படையல் வைத்து வழிபட்டனர்.