ஈரோடு:ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்கள் 50க்கும் மேற்பட்டோர், கர்நாடகாவிற்கு கல்விச் சுற்றுலா செல்வதற்காக, கல்லூரியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பேருந்தில் நேற்று (ஜன.28) இரவு 11.00 மணியளவில் புறப்பட்டுள்ளனர்.
பேருந்து புறப்பட்டு சிறிது தூரம் மட்டுமே சென்ற நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களில், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.