தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறைக்குச் சென்றால் படிக்க நேரம் கிடைக்கும் - நாதக சீமான் பரபரப்பு பேச்சு! - NTK SEEMAN

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக ஈரோடு போலீசார் சம்மன் வழங்கினர்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 4:53 PM IST

சென்னை:தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்காக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பெரியார் அமைப்பினர் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.

தந்தை பெரியார் குறித்து அவதூராக பேசியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் பெரியார் அமைப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்படி, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு காவல் நிலையத்திலும், பெரியார் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஈரோடு போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று சம்மன் வழங்கினர். இது குறித்து, நீலாங்கரை இல்லத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் (ETV Bharat Tamil Nadu)

முன்னதாக வடலூர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஈரோட்டிலும் வழக்குப் பதுவு செய்துள்ளனர். இவற்றை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அனைத்து இடங்களிலும் வழக்கு போட்டு மனச்சோர்வை உண்டாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. இதற்கு சோர்வடைகின்ற ஆளா நான்? எத்தனை வழக்குகள் வேண்டுமானலும் போடுங்கள், நாங்கள் எதிர்கொள்வோம்.

ஒரே காரணத்துக்காக போடப்பட்ட வழக்கு என்பதால் அவற்றை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி ஒரே வழக்காக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறோம். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வழக்கு என்றால், AI தொழில்நுட்பத்தில் ஐந்து பேரை உருவாக்கி அனுப்ப முடியாது, நான் தான் செல்ல வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலையாக இருப்போம் என நினைப்பது சிரிப்பாக உள்ளது” இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:UGC வரைவு அறிக்கை திரும்பப் பெறக் கோரிக்கை - முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது!

பெரியாரை பற்றி பேசியதால் நாதக-வில் இருந்து கட்சி உறுப்பினர்கள் விலகினார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “பெரியாருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு பெரியார் குறித்த புரிதலும் இல்லை, குறிக்கோளும் இல்லை. அவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், தேவை இருக்கும். அது கிடைக்கவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவார்கள்.

பெரியாரை இகழ்ந்து பேசிவிட்டேன் என கூறுகிறார்கள். பெரியார் பேசியதை தான் நான் கூறினேன். ஒன்று அதை மறுக்க வேண்டும், இல்லையென்றால் ஏன் அப்படி பேசினார்? என விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறு பேசக்கூடாது. ஏன் தமிழர் ஆட்சி சொல்லாமல், திராவிட ஆட்சி என சொல்கிறீர்கள். துணிவு இருந்தால் தகைசார் திராவிட விருது என கொடுக்க வேண்டும்.

மேலும், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பது என்பது ஏமாற்று வேலை. இல்லம் தேடி கல்வி புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. இந்தியை எதிர்க்கிறேன் என கூறிவிட்டு இந்தியில் சுவரொட்டி ஓட்டுகிறார்கள். பெரியார் அடிப்படையிலே எனக்கு எதிரியாகி விடுகிறார். பெரியார் கொடுத்த நன்கொடை ஒன்று சொல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து, கைது செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது குறித்தான கேள்விக்கு, “ நானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். காரில் பெட்டியோடு தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். என்னை பெரிய தலைவனாக்கி முதலமைச்சர் நாற்காலையில் உட்கார வைப்பது எப்படி?. என் ஒருவன் உழைப்பு பத்தாது, எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் என்னை தூக்கிக் கொண்டு உட்கார வைப்பார்கள். படிக்க நேரம் குறைவாக உள்ளது, சிறைக்குச் சென்றால் நன்றாக படிக்க முடியும்” இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details