ஹைதராபாத்:ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து இத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஜனவரி 7 ஆம் தேதி அறிவித்தார்.
ஆனால், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தின் காரணமாக இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது எனக்கூறி, இத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து விலகியது. இதேபோன்று தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தங்களுக்கு 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தான் இலக்கு எனக் கூறி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்று அறிவித்தார்.
அதேசமயம், திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்துவந்த நிலையில், இம்முறை தொகுதியை திமுகவுக்கு விட்டு கொடுப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
2026 பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால், இதில் கூட்டணி கட்சி நின்று வெற்றி பெறுவதைவிட, திமுக வெற்றி பெற்றால், அது திமுக தலைமையிலான ஒட்டுமொத்த கூட்டணிக்கும் பூஸ்ட்டாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருதியதன் அடிப்படையில், ஈரோடு கிழக்கை திமுகவுக்காக காங்கிரஸ் தியாகம் செய்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க:தமிழகமே உற்று நோக்கிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... பதிவான வாக்குகள் எவ்வளவு?
இதையடுத்து ஈரோடு கிழக்கில் திமுக வேட்பாளராக, தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். இவருக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி களமிறங்கினார்.
கடந்த புதன்கிழமை (பிப்.5) ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்காரா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகமே உற்றுநோக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. திமுக VS நாதக என்று அமைந்த இத்தேர்தலி்ல் வெற்றி பெறப்போவது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, போக்குவரத்து பொறியியல் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.