ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 'குண்டம் திருவிழா' நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
அதேபோல், இந்த ஆண்டும் மார்ச் 11ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா, மார்ச் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று (மார்ச் 9) பண்ணாரி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.