ஈரோடு: கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அன்பானந்தன். இவர் ஜோதிடர் என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவரிடம் ஜோதிடம் பார்க்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2019-2020ஆம் ஆண்டு காலகட்டங்களில் அன்பானந்தனிடம் ஈஸ்வரி, சண்முகசுந்தரம் என்ற தம்பதி, தனது மகன் அரவிந்துடன் அடிக்கடி ஜோதிடம் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது ஜோதிடர் அன்பானந்தன், ஈஸ்வரி, சண்முகசுந்தரம் தம்பதியினரின் பட்டம் பயின்ற மகன் அரவிந்த் என்பவருக்கு, மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக ஜோதிடர் அன்பானந்தன் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஈஸ்வரி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அன்பானந்தன் மீது ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த பட்டம் பயின்ற பூவழகனுக்கு, வருவாய்த் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 5 லட்சம் ரூபாயும், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மலர்கொடி தியாகராஜன் தம்பதியினர் மகன் மணிகண்டனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 5 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த ஜோதிடர் அன்பானந்தன் மற்றும் அவரது மகள் பவித்ராவை ஏற்கனவே கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரது மனைவி கோகிலாம்பாளை நேற்று கைது செய்தனர்.
இதையும் படிங்க:"குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பதிலாக இருதய குழாயில் அறுவை சிகிச்சை" - தாளவாடி அரசு மருத்துவமனை மீது பெண் குற்றச்சாட்டு!