சேலம்:ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.1,916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக இன்று (சனிக்கிழமை) துவக்கி வைத்தார்.
பின்னர், அத்திகடவு - அவினாசி திட்ட தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பின் ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “6 நீரேற்று நிலையங்கள் வழியாக 1,065 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு உபரிநீர் வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், திட்டத்தால் பயன்பெறும்.
திட்டத்தின் கீழ் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகள் நிரப்பப்பட்டு 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கொமதேக சார்பில் இதற்காக 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல்வேறு கட்ட போராட்டங்களின் பயனை இன்று அறுவடை செய்துள்ளோம்.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தின் நிலையை அமைச்சர் முத்துசாமி உடன் ஆய்வு செய்தோம். அப்போது நிறைய இடங்களில் நிலம் கையகப்படுத்தாமல் இருந்தது. காலிங்கராயன் அணைக்கு அருகில் இருந்து நீரேற்று செய்யப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்தபடாமல் இருந்தது. முதலமைச்சரின் அழுத்தத்தால் அமைச்சர் முத்துசாமி நிலத்தை கையகப்படுத்தி, திட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
தற்போது மழை பெய்து வருவதால் இத்திட்டம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. துவக்கத்தில் இத்திட்டம் நிறைவு பெறுமா என்ற பயம் இருந்தது. ஆனால், தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவிற்கு தனித்திறமை உள்ளது. அதற்கு பாராட்ட வேண்டும். சுதந்திர தினத்திற்குப் பிறகு அத்திகடவு - அவிநாசி திட்டத்தை தொடங்க உள்ளதாக ஸ்லீப்பர் செல் மூலம் தெரிந்து கொண்டு அண்ணாமலை பேசியுள்ளார்.
இத்திட்டத்திற்காக அண்ணாமலை ஒரு துரும்பைக் கூட எடுத்து போடவில்லை. கொங்குநாட்டில் பிறந்ததாகச் சொல்லிக் கொள்ளும் அண்ணாமலை இதுவரை கொங்குநாட்டிற்கு ஒரு நல்லதாவது செய்துள்ளாரா? கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். அதற்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா அண்ணாமலை? தற்போது வெளியான மத்திய பட்ஜெட்டில் கோவைக்கு ஏதாவது பட்ஜெட் ஒதுக்கப்பட்டதா? அரசியல் ஆதாயம் தேடுவதையே திறமையாகக் கொண்டுள்ளார் அண்ணாமலை.
மேலும், சேலம், நாமக்கல், திருச்சி மக்கள் பயன்பெறும் வகையில் திருமணிமுத்தாறு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதுவும் 50 ஆண்டுகால கனவு. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் முன்பு காலிங்கராயன் பெயரைச் சேர்த்து அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்.. கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் கனவு..! - ATHIKADAVU AVINASHI PROJECT