தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வரும் கல்வியாண்டிற்கான விலையில்லா லேப்டாப் வழங்கும் அறிவிப்பை வெளியிடுக" - ஈபிஎஸ் வலியுறுத்தல்! - Free Laptop Scheme - FREE LAPTOP SCHEME

Edappadi Palaniswami: புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் திமுக அரசு வெளியிடாததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Laptop and EPS
மடிக்கணினி திட்டம் மற்றும் எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 9:44 PM IST

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு பதிவில், “ஏழை, எளிய சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் மின்சார வாரியம்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதனால் ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர். தற்போது, இந்த விடியா திமுக அரசின் மின் வாரியம் வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகி விட்டது. தனியாரிடமிருந்து மின் கொள்முதல், மின்மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல், நிலக்கரி கொள்முதல் என்று எல்லா வகைகளிலும் கொள்ளையடிப்பதற்காகவே செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது. வசன வியாபாரிகள் அரசின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் அன்றாடம் இருளில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்றும், மின் இணைப்பு துண்டிப்பை சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேனி பாலக்கோம்பை பகுதியில் கிராவல் மணல் கடத்தல்.. நில உரிமையாளர் ஆட்சியரிடம் மனு! - Sand Theft In Theni

ABOUT THE AUTHOR

...view details