தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலில் கிரானைட் தற்போது டங்ஸ்டன்; கனிமச் சுரண்டலுக்கு இலக்காகிறதா மேலூர்? கொதிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

மதுரை, மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என எம்பி சு.வெங்கடேசன், பூவுலகின் நண்பர்கள் மற்றும் சூழலியலாளர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

மதுரை:மதுரை மாவட்டம், மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய முகிலன், "மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 11 வருவாய் கிராமங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம், வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூழலியலாளர் முகிலன் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

டங்ஸ்டன் கனிம சுரங்கம்:மேலூர் பகுதியில் காலம் காலமாக இயற்கையை நம்பி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய அரசின் பொதுப்பணி துறையே கடந்த 2020ல் இந்த பகுதியை 70 சதவீதத்திற்கும் மேல் நீர் உள்ள பகுதி என சான்றிதழ் அளித்துள்ளது. அதன் காரணமாக இப்பகுதி மக்கள் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த நீரை வைத்து தான் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த பகுதிகளில் அரிய வகை கனிமங்களில் ஒன்றான டங்ஸ்டன் இருப்பதை செயற்கைக்கோள் மூலமாக கண்டறிந்த அரசாங்கம், கடந்த ஏழு ஆண்டுகளாக வெளியே தெரியாமல் ஆய்வு செய்துள்ளது. இதற்காகவே சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கான தண்ணீருக்கு கரூர் மாயனூர் அருகே இருந்து காவிரி, தென்வெளளாறு, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் என்ற பெயரில் 14 ஆயிரம் கோடி செலவில் நிலத்தடி நீர் செறிவூட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இந்தத் திட்டத்தின் வாயிலாக நிலத்தடி தண்ணீர் என்பது வெறும் 30% தான் மீதமுள்ள 70% தண்ணீர் இங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் என நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இந்த சுரங்கம் அமைப்பதற்காக ஏறக்குறைய 50 இடங்களுக்கு மேல் சோதனை செய்திருக்கிறார்கள். ஆனால் ஜனநாயக நாட்டில் இவை எதுவுமே அந்தப் பகுதி மக்களுக்கு தெரியாது. தேர்தலில் பங்கெடுக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தும் கூட, மக்களிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு துணை நிற்கும் அவலம் இங்கு நடந்தேறியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.

இதையும் படிங்க:மதுரை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் போராட்டம்!

மதுரை எம்பி:இதற்குக் கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 'கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத மத்திய அரசு, தற்போது அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது.இதனை ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும், தொடர்ந்து அழகர் கோவில் பகுதியில் அனைத்து கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்:மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது, எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மத்திய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும், அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details