கோயம்புத்தூர்: பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது முகநூல் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், அந்த வீடியோவில் கோவை வந்த அவர், தனது குடும்ப நண்பரான மருத்துவர் அனந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், மருதமலை வனப்பகுதியை ஒட்டி இந்த வீடு அமைந்துள்ள நிலையில் இயற்கையான இடத்தில் சொகுசு வீட்டை கட்டியுள்ளதாக கூறி, வீட்டில் உள்ள இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மருத்துவர் அனந்த கிருஷ்ணன் வீட்டில் வைத்துள்ள இரண்டு துப்பாக்கிகளை குறித்து கேட்டறிந்துள்ளார்.
அப்போது அந்த வீடியோவில் உள்ள நபர்கள் இந்த துப்பாக்கிகள் ஒரிஜினல் துப்பாக்கி, டார்கெட்டை துல்லியமாக சுடும் எனவும், ஏர் ரைபில் வகையைச் சார்ந்ததால் இதற்கு உரிமம் தேவை இல்லை என கூறியவாறு, அந்த துப்பாக்கியில் பால்ரஸ் குண்டை லோட் செய்து அங்கு வைக்கப்பட்டிருக்கு டார்கெட் அட்டையை சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.