சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 31,336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. பொதுவாக, மாணவர்கள் சேர்க்கை என்பது அரசுப் பள்ளிகளில் ஆண்டுதாேறும் கோடை விடுமுறை முடிந்த பின்னர் ஜூன் மாதம் தான் துவக்குவர்.
ஆனால், நடப்பாண்டில் மார்ச் 1ஆம் தேதி முதலே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருவதால், தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 24 ஆயிரத்து 844 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அதில், அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 793 மாணவர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 645 மாணவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 868 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 1,741 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே உள்ளது. பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதல்முறையாக திறன்மிகு வகுப்பறையானது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கும்போது செயல்பாட்டில் இருக்கும். இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுமார் 80 ஆயிரம் பேருக்கு டேப்கள் (Tablets) வழங்கப்பட உள்ளது.