எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu) சென்னை:எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையை திறக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீண்டும் திறந்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து, கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை நடத்தினர். இது குறித்து பல முறை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், “அமோனியா கசிவு ஏற்பட்ட பிறகு, தமிழ்நாடு அமைத்த வல்லுநர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு அளித்த நெறிமுறைகளை கோரமண்டல் நிறுவனம் கடைபிடிக்க வேண்டும். ஆலை மீண்டும் இயங்கும் முன்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
கப்பலில் இருந்து ஆலைக்கு வரும் அமோனியா குழாயை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து, வாரியத்தின் பரிந்துரையை கடைபிடித்து மீண்டும் செயல்பட வேண்டும்” என கோரமண்டல் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கூறியதாவது, “33 கிராமங்கள் ஒருங்கிணைந்து எண்ணுர் கோரமண்டல் தொழிற்சாலையை மூடுவதற்காக 150 நாட்களாக போராடினோம். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசுக்கு கட்டுப்பட்டு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
இந்நிலையில், எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, இன்று எண்ணூர் தொழிற்சாலையை மூண்டும் திறக்க பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் பயத்தை காட்டிய தொழிற்சாலை இருக்கக்கூடாது என்பது தான் தங்களுடைய ஒற்றை கோரிக்கை.
எண்ணூர் பகுதியில் வாழக்கூடிய மக்களிடம், தொழிற்சாலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கருத்துகள் கேட்கப்படவில்லை. தொழிற்சாலையால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையை மீண்டும் திறந்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ராகுலை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு; அரசியல் தீயைப் பற்ற வைத்த அதிமுக! - Sellur Raju Praises Rahul Gandhi