சென்னை:டெல்லியில் ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கு உட்பட ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியை வருவாயை சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்று பதிவு செய்திருந்தனர். மேலும் இது தொடர்பான ஆவணங்களையும் பெற்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் அமீரின் வீடு மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீரிடம் 10 மணி நேரம் விசாரணைகள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குனரும் இணைந்து திரைப்படம் தயாரிப்பது, தொழிலில் பங்குதாரர்களாக முதலீடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பாதித்த பணத்தை அமீர் சம்பந்தப்ட்ட தொழிலுக்கு கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் அமலாக்கத்தறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், ஜாபர் சாதிக்கு உடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் ஒரே முகவரியில் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜாபர் சாதிக் சகோதரர் நடத்தி வந்த உணவகத்தோடு தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், அவருக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்களின் பங்குதாரர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - ED Raid In Jaffer Sadiq House