சென்னை:சென்னை வியாசர்பாடி அருகே நேற்று (செப்.18) அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (45) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.
மேலும் காக்கா தோப்பு பாலாஜி மீது ஐந்து கொலை வழக்கு உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசார் பிடியிலிருந்து தப்பிஓட முயன்றபோது போலீசார் தற்காப்புக்காக காக்கா தோப்பு பாலாஜியை சுட்டதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடல் உடற்குறு ஆய்விற்காக நேற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் என்கவுண்டர் செய்யப்பட்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஆர்.டி.ஓ இப்ராஹிம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காக்கா தோப்பு பாலாஜியின் உடலை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.