தருமபுரி:தருமபுரி இலக்கியம்பட்டியில் கடந்த ஜூலை 6ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி ஓட்டலில், கிரில் மாஸ்டராக தருமபுரி வி.ஜெட்டிஹள்ளியைச் சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரவு 9 மணியளவில் ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர்.
அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது ஆசிக்கை குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
இதைப் பார்த்து ஓட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், முகமது ஆசிக்கை குத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதனை அடுத்து, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இக்கொலை குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.