கோயம்புத்தூர்:கோடை காலம் ஆரம்பமாகி விட்டதால், கோயம்புத்தூர்ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. அதனால், வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் பற்றாக்குறையை போக்க வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தொட்டிகளில் தன்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இருப்பினும், வன விலங்குகளுக்குத் தேவையான உணவுகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. குறிப்பாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் செல்கிறது.
அந்த வகையில், கோவை வனக்கோட்டம் மதுக்கரை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ள நிலையில், அங்கிருந்து இடம் பெயர்ந்து, கோவை வனச்சரகத்திற்குள் புகுந்துள்ளன. இந்த யானைகள் தற்போது தடாகம் மற்றும் காளையனூர், பெரியதடாகம் பகுதிகளில் சுற்றி வருகிறது. இதனிடையே, தடாகம் மடத்தூர் பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானை, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உணவு தேடி வருகிறது.