கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஆலந்துறை அடுத்த பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளதால், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் இக்கோயிலைக் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு (மார்ச் 14) வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியுள்ளது. கார் நிறுத்தம் அருகே அந்த யானை வந்தபோது, அங்கிருந்த பக்தர்கள் யானையை புகைப்படம் எடுப்பதிலும், யானையை பார்த்து கணேசா என சாமி கும்பிடுவதுமாக இருந்துள்ளனர்.
அப்போது அந்த யானை திடீரென பக்தர்களை துரத்தியதால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கார்களுக்கு இடையே ஒளிந்து கொண்டதால், பக்தர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர். பின்னர் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் அங்கு வந்து, ஒற்றை ஆன் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.