கன்னியாகுமரி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் விறுவிப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், மாவட்டத்தின் முதல் வாக்குச்சாவடியான மேல் கோதையார் வாக்குச்சாவடியில் மொத்தம் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி அவர்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள 1ஆம் வார்டு பகுதியான மேல் கோதையார் பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தின் முதல் வாக்குச்சாவடிக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன.
இங்குள்ள மின் நிலைய ஊழியர்களான 6 ஆண் வாக்காளர்கள் மற்றும் 4 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 10 வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்ய பேச்சிப்பாறையில் இருந்து செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், இந்த வாக்குச்சாவடிக்கு, திருவட்டாரில் இருந்து நாகர்கோவில் பணக்குடி, களக்காடு, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக சுமார் 175 கிலோ மீட்டர் பயணித்து, மேல் கோதையாறு வாக்குச்சாவடிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இரு வாகனங்களில் நேற்று கொண்டு சென்றனர்.