சென்னை:இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், இன்று (மார்ச் 11) டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக தேர்தல் பார்வையாளர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மாநிலத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், தமிழக தேர்தல் பார்வையாளர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.