கரூர்:18வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் தேர்தல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அதன் படி கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 9.19 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
- பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குளித்தலையில் பறக்கும் படை எண் 2 குழுவினர், குளித்தலையிலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடி அருகே சோதனைகள் ஈடுபட்டிருந்தபோது, பெட்டவாய்த்தலையில் இருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தபோது, திருச்சி மாவட்டம், மணப்பாறை தர்மலிங்கம் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரிடமிருந்து ரூபாய் 1,03,500 கைப்பற்றினர்.
- அதே இடத்தில் மற்றொரு காரை சோதனை செய்த போது, அதில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம், ஜீவா நகரைச் சேர்ந்த எம்.கலைவாணன் என்பவரிடம் இருந்து ரூபாய் 4.8 லட்சம் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டதில் முறையான ஆவணம் ஏதும் இல்லாததால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
- கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 1.3 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றிக் குளித்தலை வட்டாட்சியரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
- கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், 2.6 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தைக் கைப்பற்றி கரூர் வட்டாட்சியரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்!