மதுரை:மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் படம் இடம் பெற்றதாக வந்த புகாரை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை அகற்றினர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது என்பதால் ஆங்காங்கே மறைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறி மதுரை அண்ணா பேருந்து நிலைய பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி பிரிவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோரது படங்கள் இருப்பதாகத் தேர்தல் அலுவலகத்திற்குப் புகார் வந்தது.