விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாமாத்தூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தற்போது விசிக ரவிக்குமாரையும், கடந்த சட்டமன்ற தேர்தலில் புகழேந்தி ஆகியோர் வெற்றி பெற்றது போல, இம்முறை அன்னியூர் சிவாவை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். பின்னர், விக்கிரவாண்டி தொகுதியில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்த தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். அவை பின்வருமாறு:-
- விக்கிரவாண்டியில் 3 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நீதிமன்றம் கட்டப்படும்.
- ரூ.18 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் திறக்கப்படும்.
- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.62 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலம் விரைவில் முடிக்கப்படும்.
- சாத்தனூர் அணையின் உபரிநீர், நந்தன் கால்வாயில் விடப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனமலைப்பேட்டை ஏரியில் கலக்கும் விதமாக திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்' என்று கூறினார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசு நிறைவேற்றிய திட்டங்களாக கூறியவை பின்வருமாறு:-
'நந்தன் கால்வாய் திட்டம் 75% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அன்னியூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய காத்திருப்போர் கூடம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.