தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு! - Wild Elephant Attack - WILD ELEPHANT ATTACK

Wild Elephant Attack: காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தாளவாடி மலைப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Wild Elephant Attack
காட்டு யானை தாக்குதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 3:18 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதியில், ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த காட்டு யானைகள், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயத் தோட்டங்களில் உள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த கரும்புகளை சேதம் செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தோட்டத்திற்குள் இருந்த கரும்புக் கட்டுகளை தும்பிக்கையால் தூக்கியபடி, தோட்டத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை, அந்தப் பகுதிக்குச் சென்ற நெய்தாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளம்மாள் (70) என்ற மூதாட்டியைக் கண்டு, ஆக்ரோசத்துடன் பிளிறியபடி துரத்தி உள்ளது.

இதையடுத்து, யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக மூதாட்டி காளம்மாள் அங்கும், இங்கும் ஓடியுள்ளார். இருப்பினும், மூதாட்டியை விடாமல் துரத்திய காட்டு யானை, தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்துள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காட்டு யானையை விரட்டி அடித்து விட்டு, பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு, தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:மகாவீர் ஜெயந்தி: சென்னையில் நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு! - Mahavir Jayanti Festival

ABOUT THE AUTHOR

...view details