கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிலர் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் (வயது 61) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினசரி மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த சுப்பிரமணியன், நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். இதனால் "தனக்கு கண் பார்வை தெரியவில்லை என்றும், வயிற்று வலி வாந்தி, உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுகிறது" என தன்னுடைய பேரன் கலியபெருமாளிடம் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.