தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்'.. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பில் ஏகனாபுரம் மக்கள் அதிர்ச்சி முடிவு! - parandur villagers protest - PARANDUR VILLAGERS PROTEST

parandur airport issue: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 690 நாட்களாக போராடி வந்த கிராம மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடையப் போவதாக முடிவெடுத்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

parandur villagers protest
parandur villagers protest (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 10:31 PM IST

பரந்தூர்:காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டம் 690 வது நாளை எட்டியுள்ளது. இது போக கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் தேவை இல்லை என்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லாததால் கிராம சபை புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேபோன்று சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்து ஏகனாபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் போராட்டம் நடக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள். ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தல் முடிவு பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொழில் முதலீடு ஊட்டுவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், புதிய பசுமை வேலி விமான நிலையம் திட்டம் அமைப்பதற்கான நில எடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எடையார்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சுமார் 59.75 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து நிலை எடுப்பு குறித்து தகவல் வருவதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வருகின்ற 24-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, கிராம மக்களின் போராட்டம் 700-வது நாளை எட்ட உள்ள நிலையில் , ஆந்திராவில் தஞ்சமடைய சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கிராம மக்களின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருமையாக கருதுகிறோம்: இதுகுறித்து, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நில அபகரிப்பான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து, விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுதை பெருமையாக கருதுகிறோம். எனவே, சொந்த மண்ணில், மானம் இழந்து அகதியாக வாழ்வதை விட, மொழி தெரியாத அன்னிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என்று ஒட்டுமொத்த பொது மக்களின் முடிவு செய்து உள்ளோம். எனவே, வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் அடைய எங்களுடைய போராட்ட குழுவினர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க செல்கின்றனர்'' என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போட்டியிலிருந்து விலகிய அதிமுக! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பலத்தை காட்டுமா நாம் தமிழர்?

ABOUT THE AUTHOR

...view details