சென்னை:சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திருவெங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாகச் செயல்பட்ட முக்கிய குற்றவாளிகள் பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்ட 5 நபர்களை மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் என்பவரை நேற்று செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 2 நாட்களாக அஸ்வத்தாமனிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலப்பிரச்சனையில் அஸ்வத்தாமன் ஈடுபட்ட போது, அவருக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் இருந்ததால் அவரை கொலை செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டதாகவும், மேலும் இதுதொடர்பாக அருள் என்பவரை மூன்று முறை அஸ்வத்தாமன் தனியாக சந்தித்துப் பேசி, பண உதவிகள் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.