"மாநிலக் கல்விக் கொள்கை அடிப்படையில் தமிழ்நாட்டின் கல்விமுறை இருக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சி புளியந்தோப்பு கிராமத்தில் நீர்வளத்துறைச் சார்பில் ரூ.8.84 கோடி மதிப்பில் சமுத்திரம் ஏரி புனரமைக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மார்ச் 16) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மத்திய அரசின் பி.எம் ஸ்ரீ கல்வித் திட்டம் என்பது தனி. தேசிய கல்விக் கொள்கை திட்டம் (NEP) என்பது தனி. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் இழுக்க வேண்டும் என்பதற்காக பிஎம் ஸ்ரீ யில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஒரு வருடத்திற்கு ரூபாய் 3,500 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது என்று சொல்லும்போது அதில் 3வது மற்றும் 4வது தவணையை நிறுத்தி வைத்துவிட்டார்கள். ஏன் நிறுத்தி வைத்தீர்கள் என கேட்கும்போது, நாங்கள் சொல்வதில் நீங்கள் சேர வேண்டும் என கூறுகிறார்கள். சரி இதற்காக ஒரு கமிட்டியை அமைத்து நமது கருத்தையும் தெரிவிப்போம். சரிவரவில்லை என்றால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.
முதலில் புதிய கல்விக் கொள்கையின் சரத்துக்களில் என்ன உள்ளது என்று பார்த்த பிறகே முடிவை எடுப்பதாக தம் கூறினோம். எனவே கவலைப்பட வேண்டும். அமைச்சர் என்பதைத் தாண்டி புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவனாகத்தான் நானும் இருப்பேன். ஏனென்றால் நமது மாணவர்களுக்கு என்ன தேவை, நமது மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை வைத்துத் தான் இன்று நாம் மாநில கல்விக் கொள்கையை (State Education Policy) அமைத்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிஏஏ விவகாரத்தில் மாநிலத்திற்கு உரிமை இல்லை. நாங்கள் இதனைச் செய்தே தீர்வோம் என்கிறார்கள். இதன் மூலமாகவே தெரிகிறது அவர்கள் எந்த அளவிற்கு ஒரு மாநிலத்தின் உரிமை பறித்துக் கொள்வதற்குப் பாசிசமாகச் செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு பெரிய எடுத்துக்காட்டு. நாம் இங்கு நல்ல உறவோடு இருக்கிறோம். எனவே அதனைக் காக்கக்கூடிய தமிழக முதலமைச்சர் இருப்பார்" எனத் தெரிவித்தார்.
அதேபோல், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ மாணவியர்கள் இலவச பயிற்சி முகாம் கடந்த 10ஆம் தேதி கொட்டையூரில் உள்ள கும்பகோணம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 1,500க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த நிலையில் இந்த இலவச பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் போட்டித்தேர்வை சுலபமாக எதிர்கொள்ள உதவிடும் வகையில், 6 வினா - விடைகள் அடங்கிய கையேடுகள் கொண்ட புத்தக தொகுப்பை இலவசமாக வழங்கும் விழா அதே கும்பகோணம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது.
இந்த விழா மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேர்வர்களுக்கு இலவச புத்தக தொகுப்பை வழங்கினார்.
இதையும் படிங்க:“பிரதமர் தமிழில் பேசினால் மகிழ்ச்சியே” - கனிமொழி பேட்டி!