தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! - north east monsoon

வடகிழக்கு பருவமழைக்காலத்தில் மாணவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை :வட கிழக்கு பருவமழைக்காலங்களில் மாணவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பள்ளி பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ளார்.

அறிவுரைகள் : மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் மின் இணைப்புகளைக் கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது, மாணவர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் வேண்டும்.

பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பள்ளிகளில் தங்கவைக்க பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளர் விவரங்கள் தொடர்புடைய வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும்.

பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதைக் கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.

பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்க்கு தெரிவித்தல் வேண்டும். விடுமுறைக் காலங்களில் பள்ளிக் கட்டடங்களை குறிப்பாக மேற்கூரையினை தூய்மையாக பராமரிக்க 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் உதவியுடன் தேவையான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் உரிய தரைத்தளம் சரியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்துள்ளதை ஆய்வு செய்து புதிய பராமரித்தலுக்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இடிப்பதற்கான நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். சிறிய கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தால் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கலாம். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.
மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.

தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அதனை பயன்படுத்தாமல் பூட்டிவைக்க வேண்டும். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள். கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடி வைக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகள் ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

இதையும் படிங்க :"வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வேண்டுமென்றால் இதயம் பலமாக இருக்க வேண்டும்" - திமுகவை சாடிய வானதி சீனிவாசன்!

குறிப்பாக, காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது.

மழைக்காலங்களில் இடி மின்னல் போன்வற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் மின்வாரியத்தின் துணையுடன் அவைகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும், சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும். பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

கடலோர பகுதிகள் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details