சேலம்: சேலம் அடுத்த ஓமலூரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிமுக சார்பில் நடத்தப்பட உள்ள மின் கட்டண உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது, நாகப்பட்டினம் பகுதியிலிருந்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திமுக உட்பட மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டதற்கு, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "ஏழை எளிய தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட அம்மா உணவகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சரியான முறையில் செயல்படவில்லை, தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் தரமான உணவு தயாரித்து ஏழை எளியவருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சென்னையில் 47 அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை ஏன் மூன்றாண்டு காலம் செய்யவில்லை? அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
அம்மா உணவகத்தின் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால், ஏழை எளிய மக்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. இதனால் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏழை எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனை அறிந்த பிறகு தமிழக முதலமைச்சர் ஆய்வை நடத்தியுள்ளார்" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, "200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகம் கொலை நகரமாக மாறி உள்ளது வேதனைக்குரியது. காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்படாத காரணத்தினால் இத்தகைய விளைவு ஏற்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தானாக முன்வந்து சரணடைந்த நபர் திட்டமிட்டு என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை கையில் விலங்கு அணியாமல் அழைத்துச் சென்றது ஏன்? இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது. திமுக குடும்ப கட்சியாக இருந்து கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "துணை முதலமைச்சர் பதவி மு.க.ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல. திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி வழங்க முன்வரக்கூடாது? தமிழ்நாடு முழுவதும் திட்டங்களை துவக்கி வைக்க தமிழக முதல்வர் பல மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால், அதிமுக ஏற்கனவே நடத்திய திட்டங்களை தான் திமுக அரசு திறந்து வைத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:சிறுவாணி அணை விவகாரம்; கேரள அரசுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!