சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூன் 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிகுந்த துரதிஷ்டவசமானது. மனவேதனை அளிக்கிறது. அவரது கொலை திட்டமிட்டு நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனையை இந்த அரசு பெற்றுத்தர வேண்டும். அண்மைக்காலமாக அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை, சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளர் படுகொலை, தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை என தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
சிபிஐ விசாரணை: படுகொலை செய்துவிட்டு கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்கின்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தோம். சிசிடிவி காட்சிகளுக்கும், அரசு எடுத்த நடவடிக்கையும் வேறு விதமாக இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த கொலை திட்டமிட்டு நடைபெற்று இருப்பதாக தெரிய வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:நாளை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு.. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என்ன?