சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2004, 2009, 2019 ஆண்டு முதல் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாகவும், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவை தொலைத் தொடர்புத்துறையில் முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து, ஏப்ரல் 15ஆம் தேதி புரசைவாக்கத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், குடும்ப வளர்ச்சிக்கு பாடுபடும் தயாநிதி மாறனை தோற்கடிக்க வேண்டும். தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.